Search This Blog

Wednesday, February 1, 2023

இமயத்தில் ஒரு ஆன்மிக பயணம்

 
இமயத்தில் ஒரு ஆன்மிக பயணம்

2019ல் முதல் முறையாக ஹிமாச்சல பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள சில மலை வாசஸ்தலங்களை  கண்டு திரும்பினேன். பனிச்சிகரங்கள், மேக மூட்டம் நிறைந்த சாலைகள், சில்லென்று  பாயும் நதிகள், நீண்டு வளர்ந்த மலைகள் - இப்படி ரம்மியமான பல காட்சிகளையிடையே நிலச்சரிவுகள், பேராபத்தான பள்ளத்தாக்குகள், திகிலூட்டும் சாலைகள் போன்றவற்றவையும் கண்டேன்.

  நான், என் மனைவி மற்றும் குழந்தைகளோடு சென்றது ஒரு சுற்றுலா. இமயமலையின் வடமேற்கு திசையில் சில பகுதிகளை பார்த்தபின்இமயத்தின் கிழக்கு திசையில் பக்தி பயணம் சென்றால் என்ன?’ என அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது

    பல ஆண்டுகளுக்கு முன் அமரர். திரு. பரணீதரனின் (T.S. Sridhar/Marina) ‘பத்ரி கேதார் யாத்திரைபுத்தகத்தை ஓரளவுக்கு படித்தது நினைவுக்கு வந்தது .

 
  சென்னைக்கு திரும்பிய  பின் மீண்டும் அதே புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். ஹரித்வார், ரிஷிகேஷ், தேவப்பிரயாகை, ருத்ரப்பிரயாகை, கங்கோத்ரி, கோமுக் என பல ஊர்கள் என் நினைவுக்கு வந்தன

  பாகீரதி, மந்தாகினி, அலக்நந்தா என பல பெயர்களில் அழைக்கப்படும் நதிகள் ஒன்றிணைந்து, கங்கை என்ற பிரபலமான பெயரோடுமிக நீண்ட தூரம் பயணம் செய்து பல மாநிலங்களை கடந்து, வழிநெடுகிலும் நம் தேசத்தின் பக்தியையும் கலாச்சாரத்தையும் வளர்த்து, வங்கக்கடலில் கலப்பதையும் படித்து என் சிந்தனையில் ஒரு ஆசையை விதைத்தேன். அந்த விதை பயிராக 3 ஆண்டுகள் ஆயின. எனினும், முதல் அறுவடையே எனக்கு நல்ல நல்ல தெய்வீக அனுபவங்களை தந்தது.

 
 நேரம் கிடைத்த போதெல்லாம் கங்கையை பற்றியும் தேவ பூமியாம் உத்தராகாண்ட் பற்றியும் படித்தேன். உத்தராகாண்டில் உள்ள  திருத்தலங்கள் என்ன? அங்குள்ள சிறப்புகள் என்ன? நதிகள்  என்ன? - இப்படி பல கோணங்களில் யோசித்துப்பார்த்தேன். ஆராய்ச்சி செய்து பல தகவல்களை சேகரித்தேன் 

     இந்த காலகட்டத்தில் என் ஆசை கனவுகள் தினம் வளர்ந்தன.

      நான் விதை செய்த பயிர் துளிர் விடத்தொடங்கியது ...... மே 2022ல்!

     நமாமி கங்கே! - இந்த வீடியோ பாடலை பார்த்தபின், இமயத்தையும் அங்கு பொங்கிப் பாயும் நதிகளையும் காண வேண்டும், அங்கே உள்ள புண்ணிய ஸ்தலங்களையும் ஒரு முறை பார்த்தே ஆக வேண்டும் என பலமுறை  சபதமேற்ப்பேன்

     போதாக்குறைக்கு, பரணீதரனின் பத்ரி கேதார் யாத்திரை  புத்தகத்தையும் எடுத்து வைத்து கண்ணில்படும் பக்கங்களையும்  படிப்பேன்.

     
     ‘ஓஹோ இந்த ஊரில் இப்படியா?’,  ‘இவ்வளவு தூரமா?’, ‘இந்த மாதிரியாகவா இருக்கும்?’, ‘இப்படியொரு அதிசயமா?’, ‘இத்தனை விசேஷமா?’,  ‘இந்த வழியில் சென்றால் இதை பார்க்கலாமா?’ , ‘இயற்கை இப்படியெல்லாம் கூட வினோதமான காட்சிகள் படைத்திடுமா?’  இதுபோன்ற பல கேள்விகளும் ஆச்சரியங்களும் என்னுள் எழுந்தன
 
  சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் திரு.பரணீதரன் தரிசித்த இடங்கள் இன்றைக்கு எப்படி இருக்கும்? இணையத்தில் தேடினேன்பலரும் VLog, Blog, Tweet, Feed, Share என பல விதங்களில் பல தகவல்களை பதிவு செய்திருந்தார்கள்

       என் கற்பனையில் பல காட்சிகள்

   திருநாளைப்போவார்போல் நானும்ஒரு நாளை’  எதிர்பார்த்துஅந்த நாளும் வந்திடாதோஎன ஆசையை வளர்த்து வந்தேன்.

     
      என் கற்பனையை, கனவைப்பற்றி சில சந்தர்ப்பங்களில் என் மனைவியிடம் பேசுவதுண்டு. “பணம், உணவு, நேரம்….. பல விஷயங்களை யோசிக்க வேண்டுமேஎன பதில் தருவாள்
      
 2022 மே இறுதி வாரம். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, மாலை வேளை.  ஏதோ  பேச்சு வாக்கில்ஒரு முறை பத்ரி-கேதார் சென்று வந்தால் என்ன?” என்றாள்.

  ஒரு சில நிமிடங்கள் தான் மேற்கொண்டு பேசினோம். நல்ல நேரம் முடிவதற்குள் பந்தக்கால் நட்டுஎங்கள் இமாலய தரிசனத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டோம்

 இணையத்தின் மூலம் பல நபர்கள், டூரிஸ்ட் கம்பெனிகள்வாகன ஓட்டுனர்கள், விடுதி உரிமையாளர்கள்இப்படிப் பல இடங்களில் விசாரித்து பார்த்தோம்.

  அடுத்த சில தினங்களுக்குள் எங்கள் பயணக் குழுவில் என் மாமனாரும் ஷட்டகரும் உடன் வருவதாகச்சொன்னார்கள். என் கனவு உருவம் பெறத் தொடங்கிவிட்டது

 ஒரு பழைய நண்பர் ஹாலிடே டூர் பிளான் போட்டு, டூரிஸ்டுகளுக்கான தொகையைச் சொன்னார். எங்களுக்கோ கொஞ்சம் தயக்கம்யாத்திரைக்கான முதற்கட்ட வேலைகள், ஒரு பெரும் சவாலை ஹாலிடே டூருக்கான தொகையின் வடிவில் கண்டன.

 என் மனைவி பல இடங்களில் கிடைத்த itinerary யை வைத்துஇவ்வளவு செலவாகலாம்…… ஆகையால் சுற்றுலாவாக இல்லாமல் பக்தி பயணமாக செல்லலாமேஎன யோசனை சொன்னாள். அதுமட்டுமின்றி பயணத்திற்கான திட்டங்களில் என்னோடு சேர்ந்து கொண்டாள். என் கனவை நிஜமாகவே தனதாக்கிக்கொண்டு, “எங்கே தங்கலாம், சாப்பிடலாம், தரிசிக்கலாம்….”  என்ற ரீதியில் தினசரி யோசிக்க தொடங்கினாள். விளைவு? சில தினங்களில் நாங்களே எங்கள் பயணத்திற்கான முழு வடிவத்தையும் கொடுத்துஅதை நெறிமுறை படுத்தி, நிறைவேற்றவும்  தயாராகிவிட்டோம்

 ஜூன் முதல் வாரத்தில் எங்களுக்கு பலருடைய தொடர்புகள் கிடைத்துவிட்டனவிமானப்பயணம், ஹெலிகாப்டர் சவாரி, டெம்போ ட்ராவலர் யாத்திரை, ஹோட்டலில் சாப்பாடு என பல விஷயங்களை கருத்தில் கொண்டு முறையாக திட்டம் தீட்டினோம்.

 பதினோரு பேர் கொண்ட பயணக்குழு. மூன்று வயோதிகர்கள் நான்கு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள்

 வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு பழகியவர்கள் வடநாட்டில் கிடைக்கும் உணவை எப்படி ருசிப்பார்கள்? தமிழ்நாட்டு உணவு கிடைப்பதே அங்கு அபூர்வமான விஷயம்.

   கடுங்குளிரில் என்ன உடை அணிய வேண்டும்? வெந்நீர் கிடைக்குமாகாபி டீ கிடைக்குமாஅவசரத்திற்கு மருத்துவ உதவி கிடைக்குமா? என தினமும் ஒரு தலைப்பில் பேசிக்கொள்வோம்.

   நாங்கள் விவரம் சேகரிக்கும் சமயத்தில்வேறு யாராவது ஒருவர் புது தகவல் தருவார். பெரும்பாலான சமயங்களில் அது ஒரு சுற்றுலா சார்ந்த விவரமாகத்தான் இருக்கும்.

  திரு.பரணீதரனின் பயணக்கட்டுரைகளும் நாங்கள் இணையத்தில் பார்த்த புனிதத்தலங்களும் எங்களுக்குள்ளே வேரூன்றி, சுற்றுலாவுக்கு இடம் தராமல் ஆன்மிக பயணத்திற்கு துணை நின்றன.

 நாங்கள் பயணத்திற்கு தேர்ந்தெடுத்த வேளை செப்டம்பர் மாதம் இறுதி வாரம் தான். எனினும், ஜூன் 9ஆம் தேதி, நாங்களாகவே விமான டிக்கெட்டுகளை பதிவு செய்தோம். டெல்லிக்கு சென்று, அங்கிருந்து ஹரித்துவார் சென்று அங்கிருந்து  கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் இம்மூன்றையும் தரிசிப்பதாக முடிவு செய்தோம். சுமார் 115 நாட்கள் விரதம் இருப்பது போல, ஒவ்வொரு நாளும் இமாலய தரிசனத்திற்கு எங்களை உடலளவிலும், மனதளவிலும் தயார்படுத்திக் கொண்டோம்.

 எங்கள் விரதம் திருப்திகரமாக நிறைவேறியதையும் சற்று விவரமாக இந்த கட்டுரையில் சொல்கிறேன்.

 

உத்தராகாண்ட் மாநிலத்தில் யாத்திரை செய்ய நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்